Pages

Wednesday, March 23, 2011

சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா?


மத்திய கிழக்கின் மையமாகவும், முஸ்லீம்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் செயல்படும் ஒரு நாடாக சவுதி அரேபிய ராச்சியம் செயல்படுகிறது.

முஸ்லீம்களின் முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.

சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத் அவா்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி அரேபியா.

தவ்ஹீதுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக திகழும் சவுதி அரேபியாவில் தற்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லீம் நாடுகளின் தற்போதைய பிரச்சினைகளின் தாக்கம் சவுதியிலும் எதிரொளிக்கிறதா?

கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு மற்றும், ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் போராட்டங்களின் தாக்கம் சவுதியின் கதவுகளையும் தட்ட ஆரம்பித்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏன் என்றால் டியுனிஷியா மற்றும் எகிப்தின் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க மன்னர்கள் மற்றும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் பலர் சிலாகித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

குவைத் மன்னர் பலவிதமான திட்டங்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.

சவுதி மன்னரோ பல இலவச திட்டங்களையும், மானிய முறைகளையும் அறிமுகம் செய்துள்ளார். இதே போல் பல நாடுகள் ஆட்சி முறையிலேயே மாற்றங்களை செய்துள்ளார்கள்.

இராணுவ ஆட்சியாளர்களாக இருந்த, தற்போது இருக்கும் பலர் அரசியல் ரீதியில் பிரதமர்களை நியமித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி பல ஆட்சியாளர்கள் அண்மைய அரசியல் புரடசிகளினால் அடி அசைந்து போய் உள்ளதை நாம் காண முடிகிறது.

சவுதியில் முதன் முறையாக ஓர் அரசியல் கட்சி உதயம்.

இது வரை காலமும் மன்னர் ஆட்சியின் மூலம் மாத்திரம் மக்கள் பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த சவுதியல் தற்போது மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

ஆம் தற்போது அங்கு ஓர் அரசியல் கட்சி உருவெடுத்துள்ளது. ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யாஹ் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தக் கட்சியில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்விமான்கள், வர்த்தகப் பிரமுகர்கள் என்று பலரும் அங்கம் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தச் செய்தியை ஏ.எப்.பி சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மன்னர் குடும்பம் மாத்திரம் இந்த நாட்டை ஆட்சி செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தகவல்களை அதிகாரிகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று ஹிஸ்புல் உம்மா கட்சியின் நிறுவனர்களின் ஒருவரான சட்டத்தரணி அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஆட்சி அதிகாரம் அற்ற சவுதியில் அரசியல் கட்சியொன்றின் உதயம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டியுள்ளது.

இதுவரை சவுதியில் பாராளுமன்ற நடை முறைக்குப் பதிலாக சூரா என்ற அரசியல் ஆலோசனைச் சபையே இருந்து வருகிறது. அதிலும் அந்த ஆலோசகர்கள் மன்னரினாலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். மன்னர் தனக்கு விரும்பியவர்களை அதில் இணைக்கவும், பிடிக்காதவர்களை அதிலிருந்து நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார்.

இந்த சூரா சபை  தொடர்பான பல விமர்சனங்களில் ஒன்று சூராவில் அங்கம் வகிப்பவர்களில் அதிகமானவர்கள் மன்னரின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் மாத்திரம் என்பதுதான்.

இந்த சூரா சபைக்கு மாற்றமான பாராளுமன்ற ஆட்சி முறையை சவுதியில் ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த கட்சியின் நோக்கமாக இருக்கிறது.

அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு சவுதியில் அனுமதி உண்டா?

மன்னர் ஆட்சி நடக்கும் சவுதியில் அரசியல் கட்சிகளின் உருவாக்கத்திற்கு அனுமதியுண்டா என்ற கேள்வி தற்போது சர்வதேச சமூகத்தில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் சவுதியின் ஜனநாயக மனித உரிமைகள் செயல்பாட்டாளரான முஹம்மது அல் கஹ்தானி அவா்கள் சவுதியில் அரசியல் கட்சிகளை மக்கள் உருவாக்குவதற்கான அங்கீகாரம் அரசியல் ரீதியாக இருக்கத் தான் செய்கிறது. மேலும் சவுதியில் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டால் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா சர்வதேச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.அதனால் தாராளமாக அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

எகிப்து மற்றும் டியுனிஷியாவில் ஏற்பட்ட புரட்சியினால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அப்துல் அஸீஸ் வஹ்ஹாபி அவா்கள் இந்தப் புரட்சிகளுக்கு முன்பே சவுதியில் ஜனநாயக முறையிலான அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான தேவை உணரப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.

எகிப்து மற்றும் டியுனிஷியாவின் நிலை சவுதிக்கும் நிகழுமா?

அடக்கு முறை ஆட்சிகளுக்கு எதிராக அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் சவுதியிலும் ஏற்படுமா என்ற கேள்வி சர்வதேச சமூகத்தின் முன் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இரண்டு சிறிய ஆர்ப்பாட்டங்கள் சவுதியில் நிகழ்ந்து முடிந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி ஒரு முக்கியத்துவம் மிக்கதாக அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

ஜித்தாவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பலர் பாதிக்கப்பட்டார்கள். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாட்டினால் தான் வெள்ள நீர் வடிந்தோடுவதில் சிக்கள் ஏற்பட்டது என்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அவசரமாக செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாகவும் அதற்கும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புருத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதே போல்  தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் உள் நாட்டு அமைச்சினால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி இன்னுமொரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆக இந்தப் போராட்டங்களின் தொடரில் சவுதியிலும் போராட்டம் வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஹிஸ்புல் உம்மா அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் சந்தர்ப்பத்தில் போராட்டத்திற்கான வாசல்கள் திறக்கப்படுவதற்கு வழியேற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment