Pages

Saturday, March 19, 2011

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (1,2,3)

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (1,2,3)

உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பிராக!’ என்ற திருக்குர்ஆன் ஆயத்து, நபி பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் இருக்கும்போது இறங்கியது. உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபா மலை மீது ஏறி நின்று கொண்டு, குறைஷிக் குலத்தவர்களை அங்கே வந்து கூடுமாறு கேட்டார்கள். அவ்விதம் அவர்கள் வந்து கூடியதும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்காணும் சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். அனேகமாக நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய முதல் பிரசங்கம் இதுவாகவே இருக்கும். அது:
‘நீங்கள் நினைப்பதென்ன? இந்த மலையடிவாரத்தில் ஒரு படை வந்து நிற்கிறது. அது உங்களைத் தாக்கப்போகிறது என்று நான் தெரிவித்தால் நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களல்லவா?’
‘ஆமாம்! எங்களிடையில் நீர் சந்தேகிக்கப்படாதவர். எங்கள் அனுபவத்தில் உம்மிடம் உண்மையைத் தவிர வேறு எதையும் நாங்கள் கண்டதில்லை’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்ந்தார்கள்: ‘நானும் நீங்களும் எதிரிப் படையைக் கண்ட ஒருவனையே ஒத்திருக்கிறோம் என்பது உறுதி. அப்படி எதிரிப் படையைக் கண்ட அவன் தன் மக்களை எச்சரிக்க முனைகிறான். ஒருக்கால் எதிரிகள் தன்னை முந்திக் கொள்ளலாம் என்று அவன் நினைத்ததும், அவன் தன் கூட்டத்தாரை நோக்கி, ‘அதிகாலையில் தாக்கப்படவிருப்பது பற்றி எச்சரிக்கை!’ என்று சப்தமிட்டு விழிப்புக் காட்டுகிறான். அதே போன்று, கடுமையான தண்டனையின் முன்னிலையிலே உங்களை எச்சரிப்பவனாக நான் வந்துள்ளேன் என்பது உறுதியான விஷயம்.
‘யா பனீ அப்து முத்தலிஃப் (அப்துல் முத்தலிஃபின் கூட்டத்தாரே)! யா பனீ அப்து மனாஃப் (அப்து மனாஃபின் கூட்டத்தாரே)! யா பனீ ஜுஹ்ரா (ஜுஹராவின் கூட்டத்தாரே)! - இவ்விதம் குரைஷிகளின் எல்லா தரப்பு கூட்டத்தாரையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுவிட்டு – என் நெருங்கிய உறவினரை எச்சரிக்குமாறு நிச்சயமான முறையில் அல்லாஹ் என்னை ஏவியுள்ளான்.
மேலும் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த உலகின் நலன்கள் எதையுமோ, மறுமையின் நன்மையனானது எதையுமோ நான் உங்களுக்குப் பெற்றுத்தர முடியாது – ‘வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்று நீங்கள் சொன்னாலன்றி’. (நூல்: புகாரி, மிஷ்காத்)
‘உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக!’ என்ற திருமறை உத்தரவு இறங்கிய உடனே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய ஒரு சொற்பொழிவின் கீழ்க்காணும் பகுதியை ஸஹீஹ் புகாரியும், மிஷ்காத்தும் தந்துள்ளன. அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்றுகொண்டு இவ்விதம் பேசியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்துள்ளார்கள்:
‘குரைஷக் கூட்டத்தினரே! உங்களை நீங்களே (விலைக்கு) வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு எதிராக நான் உங்களுக்கு அணுவளவும் உதவி செய்ய முடியாது. அப்து முனாஃபின் குடும்பத்தினரே! அல்லாஹ்வக்கு எதிராக நான் உங்களுக்கு அணுவளவும் உதவி செய்ய முடியாது. (நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தையாரான) ஸஃபிய்யாவே! அல்லாஹ்வுக்கு எதிராக நான் உமக்கு அணுவளவும் உதவி செய்ய முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் சொத்தில் எதை வேண்டுமானாலும் கேள். ஆனால், அல்லாஹ்வுக்கு எதிராக நான் உனக்கு அணுவளவுகூட உதவ முடியாது.’
 
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டாவதுசொற்பொழிவு
மக்கா ஸஃபா மலையில் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதற்குச் சில தினங்களுக்குப் பின் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். குறைஷிக் குலத்தவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். விருந்து முடிந்தபின் அவர்களை நோக்கி இவ்விதம் பேசினார்கள்:
அப்து முத்தலிபின் கூட்டத்தினரே, எல்லா படைப்புகளிடமும், குறிப்பாக உங்களிடம், அல்லாஹ் என்னை தூதராக அனுப்பியுள்ளான், ‘உமது நெருங்கிய உரவினரை எச்சரிப்பீராக!’ என்று உத்தரவிட்டுள்ளான். எனவே நாவில் (வார்த்தையளவில்) மிகவும் இலகுவானவையும், அதனால் கிடைக்கக்ககூடிய நன்மையில் மிகவும் அதிகமானதுமான இரண்டு உலகங்களுக்கு, அதாவது ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி’ (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை, முஹம்மது அவன் திருத்தூதர்) என்ற இரண்டு உலகங்களுக்கு உங்களை அழைக்கிறேன். இந்த விஷயத்தில் என்னை ஆதரித்து, எனக்கு உதவி செய்பவர்கள் யார்?’
‘அல்லாஹ்வின் திருத்தூதரே! நான் செய்கிறேன்’ என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்.
‘நீங்கள் உட்காருங்கள்!’ என்று கூறிவிட்டு, நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூடியிருந்தவர்களை நோக்கி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் பதிலளிக்கவில்லை. அலீ ரளியல்லாஹு அன்ஹு தான் மீண்டும் எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் செய்கிறேன்’ என்றார்கள்.
(மீண்டும்) ‘நீங்கள் உட்காருங்கள்’ என்று கூறிய நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கூடியிருந்தவர்களிடம் தங்கள் கேள்வியை மூன்றாவது தடவையாகவும் கேட்டார்கள். ஆனால் எவரும் பதிலளிக்கவில்லை. உடனே (மறுபடியும்) அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களே எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் தூதரே! ‘நான் செய்கிறேன்!’ என்றார்கள்.
‘நீங்கள் என் சகோதரர், உட்காருங்கள்’ என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூன்றாவதுசொற்பொழிவு
கீழ்க்காணும் சொற்பொழிவு, நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை விட்டு வெளியாவதற்கு (ஹிஜ்ரத் செய்வதற்கு) முன்னால் நிகழ்த்தியது. குரைஷிக்குலத்தவரை அழைத்து ஒரு கூட்டம் கூட்டி, அவர்களை நோக்கி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
கஅப் இப்னு லுவையின் கூட்டத்தாரே! (நரக) நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
முர்ரா இப்னு கஅபின் கூட்டத்தாரே! (நரக) நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அப்துஷம்ஸின் கூட்டத்தாரே! நெருப்பிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
அப்து முனாஃபின் கூட்டத்தாரே! நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
அப்துல் முத்தலிஃபின் கூட்டத்தாரே! நெருப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
ஃபாத்திமாவே! (நரக) நெருப்பிலிருந்து தப்பித்துக்கொள்.
முஹம்மதின் அத்தை ஸஃபிய்யாவே! (நரக) நெருப்பிலிருந்து உம்மை காப்பாற்றிக் கொள்ளும்.
ஏனெனில் உங்களுக்கு (உதவும் வகையில்) நான் அல்லாஹ்விடமிருந்து எந்த விசேஷ அதிகாரத்தையும் பெறவில்லை. ஆனால் நமக்குள் நெருங்கிய உறவு முறை உள்ளது என்பது உண்மை. அதன் நைப்பால் (ஈரத்தால்) அதை (அந்த உறவுமுறையை) ஈரமுடையதாக விரைவில் ஆக்கவேண்டும்.
[ மற்றொரு தகவலின்படி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்விதம் சொல்லியுள்ளார்கள்: ‘வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை’ என்று நீங்கள் கூறினாலன்றி இம்மையுடைய நற்பயன் எதையமோ, மறுமையுடைய நற்பயன் எதையுமோ நான் (உங்களுக்குப்) பெற்றுத்தர இயலாது. ] (நூல்: மிஷ்காத்)
Source :  www.nidur.info

< Prev        Next > 

No comments:

Post a Comment