[ ஒரு ‘ஜும்ஆ’ வில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய உரையாகும் இது. இன்று ஜும்ஆ தினமாக இருப்பதால்இதை படிக்கும்போது ஒரு மஸ்ஜிதில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ‘ஜும்ஆ குத்பா பயான்’ செய்வதைநேரடியாக கேட்பதுபோன்ற உணர்வுடன் ஒருமுறைக்கு பலமுறை திரும்பக் கேளுங்கள் (படியுங்கள்). அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன். - adm. www.nidur.info ]
இப்னு ஹஜகர் (அஸ்கலான்), இப்னு ஹஸ்ம் (குர் துபா) ஆகியோரின் சொற்படி, மதீனாப் பகுதியில் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய முதல் சொற்பாழிவு இதுவே. ஹிஜ்ரி ஒன்றில், கூஃபாவிலிருந்து மதீனா நகருக்குள் புகுந்த போது, பனூ ஸாலிம் என்ற கூட்டத்தாரின் மஸ்ஜிதில் ‘ஜும்ஆ தினத்தன்று’ இது நிகழ்த்தப்பட்டது.
‘அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) நான் அவனைப் போற்றுகிறேன். அவன் நல்லுதவியையும், மன்னிப்பையும், வழிகாட்டுதலையும் வேண்டுகிறேன். அவனிடம் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன். அவனை நான் நிராகரிக்கவில்லை. அல்லாஹ்வத்தவிர வேறு இறைவனில்லை. அவனுக்குப் பங்காளி கிடையாது என்று நான் சாட்சியம் கூறுகின்றேன்.
மேலும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவன் (அல்லாஹ்வின்) அடியார் என்றும் அவன் (அல்லாஹ்வின்) தூதர் என்றும் சாட்சியம் கூறுகிறேன். அவன் அவரை (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை) சரியான வழிகாட்டுதலுடனும், ஒளிவுடனும், அச்சமூட்டுதலுடனும் அனுப்பியுள்ளான்.
நபிமார்கள் தோன்றி இடைவெளி அதிகமாகி, உண்மை ஞானம் மறைக்கப்பட்டு, மக்கள் நேரான வழியை விட்டு விலகி தவறிய வழியில் திரும்பி, காலம் மாறி, (இறுதி நாளின்) தவணை நெருங்கி, குறித்த காலம் வந்து விட்டதால் அவரை அவன் அனுப்பியுள்ளான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் பணிகின்றவன் நேர்வழி காட்டப்பட்டவனாவான். அவர்களுக்குப் பணியாதவன் வழிதவறி வெகுதூரம் போய்விட்டவனாவான்.
அல்லாஹ்வின் மீது அச்சம் கொள்ளுமாறு உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன். ஏனெனில், ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யக்கூடிய சிறந்த சிபாரிசு மறுமையை மனதில் கொள்ளுமாறு வலியுறுத்துவதும், அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறு கூறுவதும்தான். எனவே, அல்லாஹ் உங்களைத் தடுத்துள்ளவைகளில் இருந்து தூரமாகிக் கொள்ளுங்கள்.
எந்த அச்சமூட்டுதலும் இதுபோன்று உவப்பானதாகவோ, எந்த நினைவூட்டுதலும் இதுபோன்று சிறந்ததாகவோ இருக்காது. அச்சத்துடன் கூடிய முன்னெச்சரிக்கையுடனும், தன் இறைவனைக் குறித்த நடுக்கத்துடனும் நடந்து கொள்பவனுக்கு, அல்லாஹ்வின் மீது அச்சங்கொள்வதுதான் மறுமையில் அவன் விரும்புகின்றவைகளை அடைவதற்கு உண்மையான பேருதவியாக இருக்கும்.
தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ளதில், ரகசியமாகவும், பகிரங்கமாகவும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பாராதவனாக சேர்த்துக் கொள்பவன் வெகு விரைவில் புகழைப் பெறுவான். மேலும் தான் சேர்த்து வைத்த நல்ல அமல்கள் அனைத்தைiயும்விட விரும்பக் கூடிய, மற்ற அனைத்தையும் விட்டு வெகு தூரமாகி நிற்க விரும்பக்கூடிய மரணத்துக்குப் பின்னாலுள்ள வாழ்வுக்கு ஒரு பொக்கிஷத்தையே பெற்றுக்கொள்வான். அல்லாஹ் தன்னைப்பற்றி எச்சரிக்கின்றான். தன் அடிமைகளிடம் அல்லாஹ் மிகுந்த நிகரற்ற கருணையுடையவனாய் இருக்கின்றான்.
அவனுடைய வார்த்தைகள்தான் சத்தியமானவை. தன் வாக்குறுதியை அவன் பூரணமாக நிறைவேற்றுகிறான். அவன் வார்த்தைகளுக்கு மாற்றமில்லை. அவன் சத்தியமாக அறிவிக்கின்றான், ‘என்னிடம் வார்த்தை மாற்றப்படுவதில்லை, நான் அடிமைகளை மிகவும் கொடுமைப்படுத்துபவனும் அல்ல’ என்று. எனவே, உங்களின் இன்றைய - வருங்கால நடவடிக்கைளில், ரகசிய – அந்தரங்க செயல்களில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
அல்லாஹ்வுக்கு அஞ்சுபவரின் பாவங்களை அவன் மன்னித்து, அவர்களுக்குத் தரவிருக்கும் அருட்கொடைகளை அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்கு அஞ்சுவதுதான் உங்களை அவன் வெறுப்பிலிருந்து காப்பாற்றி அவன் கோப நெருப்பில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தூரமாக்கும்.
மேலும், அல்லாஹ்வக்கு அஞ்சி நடப்பதால் வதனம்; பிரகாசமானதாகிறது. இறைவனின் திருப்தி கொண்டு அந்தஸ்து உயர்கிறது. எனவே, உங்கள் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி நடக்காதீர்கள். அவன் தன் திருவேதத்தின் மூலம் தன் கட்டளைகளை அறிவித்து, அவனை அடைவதற்கான வழியையும் உங்களுக்கு ஆயத்தமாக்கியுள்ளான். அதன் மூலம் எதார்த்தமான உண்மையாளர் யார்? அப்படி இல்லாதவர் யார்? என்பதை அவன் அறிந்து கொள்வான்.
எனவே, அல்லாஹ் உங்களுக்கு நன்மையே செய்துள்ளதுபோல, நீங்களும் எதிரிகளுக்கு எதிராக, நன்மையையே செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் (அவன் எதிரகளுக்கு எதிராக) முறைப்படியான ஜிஹாதில் (புனிதப்போரில்) ஈடுபடுங்கள். அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு முஸ்லிம்கள் என்ற பெயரைத் தந்துள்ளான். தெளிவான அத்தாட்சி வந்துவிட்டபின் மடிய வேண்டியவர்கள் மடியவும், அந்தத் தெளிவான அத்தாட்சி தரப்பட்டபின் உயிரோடிருக்க வேண்டியவர்கள் ஜீவித்திருக்கத்தான் செய்வார்கள். அல்லாஹ்விடமன்றி (உதவிக்கு)த் திரும்ப வேண்டிய திசையோ (உதவி தரக்கூடிய) சக்தியோ வேறு எங்குமில்லை.
ஆகவே, அல்லாஹ்வின் திருநாமத்தை (‘திக்ரை’) மனதில் கொள்ளுங்கள். மரணத்திற்குப் பிறகு வரவிருக்கும் - அந்த வாழ்வுக்கு – தேவையான காரியங்களைச் செய்து வாருங்கள்.
ஒர் அடியான் தனக்கும் தன் இறைவனுக்கும் இடையிலுள்ளவற்றைச் சீர்செய்து கொண்டால் அந்த அடியானுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ளதை அல்லாஹ்வே சீர்செய்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு அவர்கள்மீது பரிபூரண அதிகாரமுண்டு. மக்களுக்கோ அவன்மீது எந்த அதிகாரமும் இல்லை.
அல்லாஹ் மகத்தானவன். ‘அலிய்யுல் அலீம்’ (உன்னதமான, மகத்தானவன்). அல்லாஹ்வுடையதைத்தவிர வேறு சக்தியோ, அவனைத்தவிர வேறு புகலிடமோ இல்லை. (அல் மவாஹிப்)
இன்ஷா அல்லாஹ், சொற்பொழிவுகள் தொடரும்...
No comments:
Post a Comment