Pages

Saturday, March 19, 2011

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (1)

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (1)

‘நிறைந்த அர்த்தத்துடன் விரிவாக விஷயங்களை வெளியிடும் பேச்சு வன்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்’ என்றார்கள் அண்லம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹதீஸ் குதுஸியின் ஓரிடத்தில் ‘நீர் நாவை அசைக்க வேண்டியதுதான், உடனே நாம் பேசுவோம்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்.
எனவே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவை அசைத்தால் அவர்களைப் பேச வைப்பது ரப்புல் ஆலமீன் அல்லாஹுதஆலா என்பதை உணர முடியும். அப்படி அவர்கள் நாவை அசைத்து நிகழ்த்திய சொற்பொழிவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்ததிலிருந்து 23 ஆண்டுகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இத்தகைய சொற்பொழிவுகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிதாபுகளின் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவை சரித்திர ஆசிரியர்களாலும், ஹதீஸ் தொகுப்பாளர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு சில பழக்கங்களை கடைப்பிடித்து வந்தார்கள். தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வார்கள். கையில் இரும்பு அல்லது மரத்தாலான ஒரு தடியை, போர்க்களமாக இருந்தால் ஒரு வாளை (அல்லது வில்லை அல்லது அம்பை)ப் பிடித்துக் கொள்வார்கள்.
திருமணச் சொற்பொழிவுகள் தவிர மற்றவற்றில் எழுந்து நின்று கொண்டே பேசுவார்கள். விசேஷமாக தயாரிக்கப்பட்ட மேடை அல்லது சற்று உயரமான இடத்தில் ஏறி நின்று கொண்டு சொற்பொழிவாற்றுவார்கள். ஒட்டகத்தில் அமர்ந்து கொண்டும், சம தரையில் நின்றும்கூட அவர்கள் பேசியுள்ளார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்ற எழுந்து நின்றதும், எப்போதும் முதலில் சபையினருக்கு ‘ஸலாம்’ சொல்லுவார்கள். பின்னர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு ‘ஷஹாதத் கலிமாவைக் கூறிக்கொண்டு சொற்பொழிவை ஆரம்பிப்பார்கள். (ஷஹாதத் கலிமா சொல்லப்படாத சொற்பொழிவு ஹீனப்பட்ட கையைப் போன்றது’ என்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு. முஸ்லீம் சொற்பொழிவாளர்கள் அனைவரும் இதை மறக்காமல் கருத்தில் கொள்ளவும்.)
அல்லாமா இமாம் தஹாவி அவர்களின் ரிவாயத்துப்படி பெருவாரியான சொற்பொழிவுகளை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்காணும் வாசகத்தை ஓதிக்கொண்டு தொடங்கியதாகத் தெரிகிறது.
இதன் பொருள்: ‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப்போற்றிப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகிறேன். மேலும், அவனிடம் பிழை பொறுக்க வேண்டுகிறேன். நம் நஃப்ஸ{களால் (மனோ இச்சைகளால்) விளையும் தீமைகளை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அவ்வாறே அல்லாஹ் வழிதவறும்படி விதித்து விட்டவர்களை யாராலும் நேர்வழியில் செலுத்திடவும் முடியாது. மேலும் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அல்லாஹ்வின் அடியாரும் தாதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்.
‘அல்லாஹ் அவருக்குச் சன்மார்க்கத்தைத் தந்து நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சிரிக்கை செய்பவராகவும், கியாமத்துக்குச் சமீப காலத்தில் அனுப்பியுள்ளான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் பணிந்தவர்கள் நிச்சயம் நேர்வழி பெற்று விட்டவர்களாவார்.’
இறைவா! உன்னையும் உன் தூதரையும் பணிந்தவர்களின், உன் திருப்பொருத்தத்திற்கு ஒப்ப நடந்தவர்களின், உன் கோபத்தை விட்டும் தப்பித்துக் கொண்டவர்களின் திருக்கூட்டத்தில் எங்களையும் சேர்த்து அருள இறைஞ்சுகிறோம்.’
இவ்விதம் தொடங்கும் சொற்பொழிவை சபையினருக்குச் சாந்தி உண்டாகுமாறு துஆ செய்வதுடன், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதுடன் முடிப்பது (பெரும்பாலும்) வழக்கமாக இருந்து வந்துள்ளது.
பெருநாட்கள் போன்ற விசேஷ நாட்களில் ஆண்கள் கூட்டத்தில் பேசிய பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்குத் தனியாக சொற்பொழிவாற்றுவது உண்டு. அப்போது பெண்கள் தான தருமங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உபதேசிப்பதுண்டு. சில சமயங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்ற எழுந்து நின்றுகொண்டு திருக்குர்ஆனிலிருந்து ஒரு ஸூராவை மட்டும் ஓதிவிட்டு வேறு ஒன்றும் பேசாமல் உட்கார்ந்ததும் உண்டு.
அனோகமாக, நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் ஜும்ஆ குத்பாக்களில் ‘அல்-கஹ்ஃப்’ ஸூராவை ஓதுவதுண்டு. சில சமயங்களில் மற்ற ஸூராக்களையும் ஓதியிருக்கிறார்கள். பொதுவாக, அவர்களுடைய ஜும்ஆ குத்பா, ஈத் சொற்பொழிவுகள் சுருக்கமானவையாகவும், தொழுகை சிறிது நீளமானதாகவும் இருந்து வந்துள்ளன.
சாதாரணமாக அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் எளிய நடையில், சிறு வாக்கியங்களைக் கொண்டவையாய் அமைந்திருக்கும். ஆனால், ஒரு விஷயத்தை அவர்கள் முக்கியமாகக் கூற எண்ணினால் மட்டும் அதைக் கேள்விகளாகவும், பதில்களாகவும் அமைத்து வெளியிடுவார்கள். அதில் ஒரு வாக்கியத்தையோ, வார்த்தைகளையோ இரண்டு மூன்று தடவை திரும்பத் திரும்ப சொல்வார்கள்.
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொற்பொழிவுகள் கேட்பவர்களின் இதயங்களில் ஊடுருவும்படியாகவே இருக்கும். அல்லாஹ்வின் உதவி கொண்டு, அல்லாஹ்விடம் பயபக்தி காட்டியவர்களாக அவர்கள் சொற்பொழிவாற்றும் பொழுது அவர்கள் உடல் நிறம் மாறும், நடு நடுங்கும். அடிக்கடி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கை முஷ்டியை மூடித் திறப்பதுண்டு. சில சமயங்களில் சொற்பொழிவாற்றும்போது அவர்கள் கண்கள் சிவப்பதுண்டென்றும், பேச்சு வேகம் அதிகமாகி, குரல் உயர்ந்து, அவர்கள் உணர்ச்சி வசமாகி விடுவதும் உண்டு. எதிரிகளின் படை வந்து தாக்கவிருக்கும் நிலையில், ‘அது நெருங்கி விட்டது, காலையிலோ மாலையிலோ அது உங்கள்மீது மோதி உங்களை அழித்து விடலாம்’ என்று எச்சரிப்பது போன்ற தொனியில் பேசுவதும் உண்டு என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சிலுள்ள உருக்கத்தால் சபையினர் கண்ணீர் சொரிவதும் உண்டு. சில சமயம் மக்கள் சப்தமிட்டு அழுவதும் உண்டு. நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சைக் கேட்பவர்கள் பெரும்பாலும் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையைத் திருத்திக்கொள்பவராக மாறி விடுவார்கள்.
அவசியம் என்று கருதிய போதெல்லாம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்றியதுண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை, இரண்டு பெருநாட்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் பிடிக்கும் சமயங்கள், திருமணச் சபைகள், மிதமிஞ்சிய மழை பஞ்சம் நிலவும் தருணம் முதலியவைகளில் அவர்கள் சொற்பொழிவாற்றுவது சகஜம். எப்போதாவது அவசியமான நேரங்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள் சாதாரண சமயங்களில் நிகழ்த்தியவைகளைவிட நீளமானவையாய் இருந்தன.
அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஆரம்பகாலப் பிரசங்கங்கள், குறைஷிக் காஃபிர்களின் தொல்லைகளுக்கு இடையில் நிகழ்த்தப்பட்டவை. எனவே அவை சிறியவையாய் இருந்தன. பிற்காலத்தில் (மக்கா வெற்றி, சூரிய கிரகணம், பிரிவு ஹஜ்ஜுசொற்பொழிவு போன்றவைகள்) நீண்ட சொற்பொழிவுகளை அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது ஏதாவது முக்கிய சம்பவம் நடந்து விட்டால் அதைக் கவனித்துவிட்டு, மீண்டும் தங்கள் பேச்சை தொடர்வதுண்டு.
ஒருநாள் மஸ்ஜிதுந் நபவியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ குத்பாவை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கத்பான் கூட்டத்தைச் சேர்ந்த ஏழை மனிதர் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தார். ஜும்ஆ குத்பாவுக்கு முன் தொழ வேண்டிய இரண்டு ரக்அத் தொழுகையை அவர் தொழுதுவிட்டாரா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடம் வினவினார்கள். அவர் இல்லை என்று சொல்லவே, அதை தொழுமாறு உத்தரவிட்டு விட்டு, அவர் தொழுது முடிக்கும் வரை மிம்பரின் மீது காத்திருந்திருந்தார்கள். அவர் தொழுது முடித்த பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் சொற்பொழிவை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நிகழ்த்தினார்கள். சில சமயம் விசேஷமான பிரசங்கங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே சென்று தொழுதுகையை முடித்துவிட்டு வந்து பேச்சை தொடர்ந்திருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை குத்பாக்களும், இரண்டு ஈதுப் பெருநாட்களின் குத்பாக்களும் இஸ்லாத்தில் மிகவும் முக்கிய இடம் பெற்றவை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ குத்பாக்களில் இடையில் சிறிது மிம்பர் மீது அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் பேசியதும் உண்டு. எனவே ஹளரத் உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சி காலத்தில் பெரிய குத்பாவை முடித்துவிட்டு, இமாமவர்கள் சற்று உட்கார்ந்தபின் சிறிய குத்பா ஒன்றை நிகழ்த்தும் வழக்கம் ஏற்பட்டது. இந்தச் சிறிய குத்பாவில் ஆட்சியாளரைப் பற்றிக் குறிப்பிட்டு அவருக்காகப் பிரார்த்திக்கும் வாக்கியங்களும் சேர்க்கப்பட்டன.
இவ்விதம் ஆட்சியாளர்களின் பெயரைச் சேர்த்து சொற்பொழிவாற்றாத கதீப்கள் அல்லது இமாம்கள் கலகக்காரர்களாகக் கூட கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர். மேலும் இந்த சிறிய குத்பாவின் முடிவில் நாளடைவில், பனு உமையாக்கள் ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் வசைபாடி முடிக்கும் வழக்கமும் வந்து விட்டிருந்தது. அதை நிறுத்த எண்ணிய கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறிய குத்பாவின் முடிவில்,
‘இன்னல்லாஹ யஃமுரு பில் அத்லி வல் இஹ்ஸானி வ ஈதாஇதில் குர்பா வயன்ஹா அனில் ஃபஹ்ஷாஇ வல் முன்கரி வல் பஃக்யி யஇளுகும் லஅல்லகும் ததக்கரூன்’
(நிச்சயமாக, அல்லாஹ் நீதியோடு நடக்கும்படியும், (பிறருக்கு) நன்மை செய்யும்படியும், உற்றாருக்கு (பொருள் கொடுத்து) உதவும்படியும் (உங்களை) ஏவுகிறான். இழி செயல்களிலும், தீய செயல்களிலும், கலகம் செய்வதிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது என்று அவன் தடை செய்துள்ளான். நீங்கள் (இவற்றை) நினைவில் கொள்வதற்காக அவன் உங்களை எச்சரிக்கிறான் (அல்குர்ஆன் 16:90) எனும் தீருக்குர்ஆனின் ஆயத்தை எடுத்து சேர்த்து ஓதும்படி தமது மாகாணத் தலைவர்களுக்கு உத்தரவிட்டார்கள். இதுவே இன்றும் சிறிய குத்பாவின் கடைசியில் ஓதப்பட்டு வருகிறது.
அல்லாஹ்வின் அருள் கொண்டு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய எளிய சொற்பொழிவுகள் ஒரு பக்கமிருக்க, தடபுடலான நடையில், தங்கள் எழுத்து வன்மையையும் மொழி ஞானத்தையும் காட்ட பிற்கால கதீப்கள் (இமாம்கள்) எழுதிய குத்பாக்கள் வந்து சேர்ந்தன. இதைத் தொடங்கி வைத்தவர் மர்வான் பின் ஹகம் எனும் ஆட்சியாளர்;. இவர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு
அவர்கள் காலத்தை ஒட்டி, ஸிரியாவின் கவர்னராய் இருந்தவர். அவரது உறவினரும்கூட. இதனால் காலத்துக்கேற்ற போதனைகள் அருளுவதுகூடத் தடைபட்டு மக்கள் கதீப்களின் எழுத்துத் திறனை வியக்கும் விஷயங்கள் இடம்பெற்றன.
ஆயினும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிரசங்கத்துக்கு பின்பற்றிய வழக்கங்கள் யாவும் இன்றும் குத்பாக்களில் கடைப்பிடிக்கப் படுகின்றன. முஸ்லீம்களின் நன்மைக்காக அவற்றில் பிரார்த்திக்கவும் படுகின்றன.
குத்பா நிகழ்த்தப்படும்போது அமைதியுடன் இருந்து கேட்பதையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ‘குத்பா சொற்பொழிவு நடக்கும்போது யாரும் அருகிலிருப்பவர் பேசாமலிருப்பதற்காக ‘உஷ்’ என்று சொல்வதுகூடச் சரியல்ல. அதனால் அவருடைய ஜும்ஆத் தொழுகையின் நன்மை அவருக்குக் கிட்டாமல் போகும்’ என்று எச்சரித்துள்ளார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இதன் மூலம் குத்பாக்கள் - சொற்பொழிவுகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து அதற்குரிய மதிப்பை அளிப்போமாக!
( இன்ஷா அல்லாஹ் தொடரும்.)
o இன்ஷா அல்லாஹ் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 40 சொற்பொழிவுகளைத் தாங்கி, தொடராக வரும் இக்கட்டுரையை படித்து பயன்பெறுமாறு வாசக அன்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
o இக்கட்டுரைத்தொடர் மக்களிடம் சென்றடையும் காலமெல்லாம் வள்ளலுக்கெல்லாம் வள்ளலான அல்லாஹ் இக்கட்டுரையை எழுதியை மர்ஹூம் ஆர்.பி.எம். கனீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு நன்மையை வாரி வழங்குவானாக. அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு சுவனத்தில் மிக உயர்வான நற்கூலியைக் கொடுப்பானாக. ஆமீன். - 
                                                                                 Next >    

No comments:

Post a Comment