Pages

Wednesday, March 30, 2011

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, “தின”ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.
பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த “மூடர் தினம்”. மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.
பொய் கூறுதலையும் பரிகாசத்தையும் பற்றி இஸ்லாம்
பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, பொய்யை இட்டுக் கட்டுபவர்களெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்கள்தாம் பொய்யர்கள்- அல் குர்ஆன் 16:105.
முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: அவன் பேசினால் பொய்யுரைப்பான்;  அவனிடம் எதையாவது நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் -  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரீ.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான் – அல் குர்ஆன் 9:77.
பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை (பேசுவது), நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயமாக சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே  இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். பொய் (கூறல்) நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் “பெரும் பொய்யர்” எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் - அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம்: புகாரீ.
பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல்:
இன்னும் (இதையும் நினைவு கூருங்கள்:) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள்; “(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார் – அல் குர்ஆன் 2:67.
பொய் பேசுபவனுக்கான தண்டனைகள்:
ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம், “உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?” என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் நாடியவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேர (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, “நடங்கள்” என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் நாங்கள் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய)முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரிவரை கிழித்தார். அதேபோல், அவரது மூக்கின் ஒரு துவாரத்தையும் ஒரு கண்ணையும் பிடரிவரை பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிக்கும்போது அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காகி விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், “அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யாவர்?” என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், “செல்லுங்கள், சென்றுவிடுங்கள்” என்றனர்.
நான் அவ்விருவரிடமும் “நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட அவைதாம் என்ன?” என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், “(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு) நாங்கள் தெரிவிக்கிறோம்:
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அவன் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் ஒருவரிடம் ஒரு பொய்யைச் சொல்ல, அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேருமே, அவன்தான் -  ஆதாரம்: புகாரீ ( நீண்ட ஹதீஸின் சுருக்கம்).
விளையாட்டுக்காகக்கூடப் பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் -  ஆதாரம்: திர்மிதீ.
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.
பொய் சாட்சி கூறல்:
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க ஒருவன் முயற்சியில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யனுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாகப் பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும்பாவமான காரியமாகும்.
அபூபக்ரா(ரலி) கூறியதாவது: “பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று நபித் தோழர்கள் வேண்டினர். “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்தான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து,“அறிந்து கொள்ளுங்கள்! பொய்ப் பேசுவதும், பொய்ச் சாட்சியமும் (பெரும் பாவம்);பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம்) என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள் -  நூல்: புகாரீ, முஸ்லிம்.
ஹோலி கலாச்சாரம்:
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்துச் செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிப் பண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே, மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! – நூல்: அபூதாவூத்.
இழிவாகக் கருதுவது:
பிறரை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கைகொட்டி ஏளனமாக சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும் உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களைத் தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால்தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அலட்சியமாகக் கருதி, கேவலமாக நடத்தி, இழிவுபடுத்துகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முழுமையான முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர்தான் -  நூல்: புகாரீ.
எனவே, சகோதர-சகோதரிகளே!
இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக!
Source: Kattankudy.info

Sunday, March 27, 2011

நல்ல மனைவியரின் நற்குணங்கள்

[ பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்;
''நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ‘ நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டது.'' (திருக்குர்ஆன் 66:10)
மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த பிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான்,
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 66:11)
நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
''உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!'' (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், மிஷ்காத்)
குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது.
பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும்.
‘இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:35)
புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு.
பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும்.
குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
‘(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.’ (திருக்குர்ஆன் 30:21)
குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும்.
மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது.
‘(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்." (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
இன்ஷா அல்லாஹ், நாளை: ''நல்ல கணவனின் நற்பண்புகள்!''

Source: www.nidur.info

தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்!

மாதவிடாய் நாட்களைத்தவிர்து மற்ற நாட்கள் அனைத்துமே கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட ஏற்ற நாட்கள்தான். இருந்தாலும்சில நாட்களில் அந்த இல்லற (உடல்) உறவை தவிர்த்திருப்பது ஆரோக்கியம். அவை எந்தெந்த நாட்கள்? இதோ உங்களுக்காக!
o கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
o பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.
o சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
o குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.
o கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.
o பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.
o உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.
o கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.
o மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.
o கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
o பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.
o பொதுவாக ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை!

[ காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)
ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீதுபழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.
மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.]
"முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்." (ஸுரா : அர்ரூம் :32)
"எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை." (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.’ (புகாரி,முஸ்லிம்)
இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.
இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது.
ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
1. தீவிரமும் நிதானமின்மையும்
இங்கு நாம் ‘தீவிரம்;’ என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் ‘தீவிரவாதம்’ என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.’ என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)
‘ஷிர்க்’ போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். பொறுத்தவன் புவி ஆள்வான்;. பொறுமை இழந்தவன் காடேருவான் என்பது முதுமொழி. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும், நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.
எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.
2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்
இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றது:
"நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்" (அன்பால்: 46)
நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும,; குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.
நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மாரக்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! அர்க்கானுல் ஈமான் எனும் ஈமானின் அடிப்படைகளிலும், அர்க்கானுல் இஸ்லாம் எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும்.
சன்மார்க்கத்தின் உஸுல் (அடிப்படைகள்) கவாயித் (விதிகள்) புரூழ்கள் (கடமைகள்) கபாயிர் (பெரும் பாவங்கள்) முதலானவற்றிலும் எம்மத்தியில் அபிப்பிராயபேதங்கள் குறைவு எனலாம். கருத்து வேறுபாடு நிலவுவதெல்லாம் புரூஃ (கிளை அம்சங்கள்), நாவாபில் (ஸுன்னத்துக்கள்), ஸகாயிர் (சிறுபாவங்கள்) போன்ற ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களிலாகும். ‘காயாத்’ எனும் இலக்குகளைப் பொறுத்தவரையில் எம்மத்தியில் முரண்பாடுகள் குறைவு. அவற்றை அடைவதற்கான ‘வஸாயில்’ எனும் வழிமுறைகளிலும், அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை.
ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை. ஆனால் இவ்விடயங்களில் ஏற்படும் ‘கிலாபுகள்’ (வேறுபாடுகள்) எம்மத்தியில் ‘ஷிகாக்கை’ (பிளவுகளை) தோற்றுவிக்கலாகாது. கருத்து முரண்பாடுகளின் போது எமது முனனோர்கள் கைக்கொண்ட ஒழுங்குகளை கடைபிடிக்கப்படாமையினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.
‘இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.’ இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட ‘ஆதாபுகளுக்கு’ ஒரு சிறந்த உதாரணமாகும்.
காபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)
ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.
மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ’ அமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்;கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் – அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை; அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி சமூகத்தில் புரளிகளை கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
4. உலமாக்களின் கடமை
இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும். இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகை;கும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும். இதற்காக நாம் என்றும் வலியுறுத்துவது போல அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிழலின் கீழ் எல்லா உலமாக்களும் தம்மத்தியிலுள்ள சிறுசிறு பேதங்களையும் மறந்து அணிதிரளவேண்டும். உடன்பாடான விடயங்களை கண்டறிந்து அவற்றில் அனைவரும் இணைந்து செயற்படவும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும் எமது உலமாக்கள் முன்வர வேண்டும். இதுவே இஸ்லாமியப் பண்பும், எமது முன்னோர்களின் முன்மாதிரியுமாகும்.
இந்த மாற்றம் மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நலன்விரும்பிகளின் வேணவாவாகும். உலமாக்களே! உங்களை கடமை அழைக்கிறது. கட்டுக்களை அவிழ்த்து (உம்மத்தின் நலன்) கருதி களத்திற்கு வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இந்தப் புனிதமான மாதத்தில் பிராத்திப்போமாக.
- mjabir

அல்குர்ஆன் எச்சரிக்கும் மன இச்சைகள்!

2:120. (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடையஇச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான். ஆனால் தங்கள் (கீழ்தரமான)இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
5:49. இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:77. "வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:56. "நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக "உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் – ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
6:150. "நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் – நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் – ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
7:81. "மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் – நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."

7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
12:53. "அன்றியும், நான் என் மனதைப் பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது – என் இறைவன் அருள் புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான்" (என்றுங் கூறினார்).
13:37. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.
18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன் தன்இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.
19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
20:16. "ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதை விட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
23:71. இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப்பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
47:16. இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து "அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையேபின்பற்றுகின்றனர்.

வாழ்வைச் சீரழிக்கும் வரதட்சணை

[ அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்துவயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும்இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.
"வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும்தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானேபள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.
"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.]
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்."அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)
இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.
அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் (59:7)
அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)
மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.
"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.
வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.
இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.
இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.
அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்ஸ..
இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?
அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?
ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?
அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்."அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)
இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் "வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்" என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் (59:7)
அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)
மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.
"ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி" இது முதுமொழி. இப்போது "ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி" இது புதுமொழி.
வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.
இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.
இறைவன் தன் திருமறையில் "விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.
அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்ஸ..

Saturday, March 26, 2011

உலகில் மனிதன் புரியும் பாவங்களிலேயே மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!


Jafar Ali
"ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்." (அந்நஹ்ல்: 36)
"உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!." (அல்ஜுக்ருஃப்: 45)
"எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்." (அல்ஹஜ்: 31)
"நிச்சயமாக அல்லாஹ் இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்." (அந்நிஸா: 48)
"மனிதர்களே! நீங்கள் உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகலாம்.’ (அல்பகரா: 21)
மேலும் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்தான்." (அத்தாரிஆத்: 51)
"என்னுடைய சமூகத்தவர்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை." (அல்அஃராஃப்: 59)
மேலும், "நிச்சயமாக என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்த நபியையும் நாம் அனுப்பவில்லை." (அல்அன்பியா: 25)
"இன்னும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்க மாட்டார்கள்." (அல்புர்ஃகான்: 68)
(அல்லாஹ்வையாகிய) எனக்கு யாதொன்றையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்." (அந்நூர்: 55)
"நீர் இணை வைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்கள் யாவும் அழிந்து விடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவீர் என உமக்கும் உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துவோரில் நீர் ஆகி விடுவீராக!." (அல்ஜுமர்: 65-66)
"அல்லாஹ்வையே வணங்க வேண்டும். அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது என்றும், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கிறேன். இன்னும் அவன் பக்கமே மீட்சியும் இருக்கிறது." (அர்ரஃது: 36)
"இன்னும் உமது இரட்சகன் பக்கம் நீர் அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணை வைப்போரில் ஒருவராக ஆகி விட வேண்டாம்," (அல்கஸஸ்: 87)
"உமது இரட்சகனால் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! அவனைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை. இன்னும் இணை வைப்போரை நீர் புறக்கணித்து விடும்." (அன்ஆம்: 106)
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதை அல்லாஹ் கூறுகிறான்: "மேலும் என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக என்றும், என் இரட்சகனே! நிச்சயமாக (இந்த சிலைகள்) மனிதர்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன." (இப்ராஹீம்: 35-36) 
"எனவே அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர். (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் ஆகி விடுவீர். இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக." (அஷ்ஷுஅரா: 213-214)
source: http://islamkural.com/home/?p=3843


                                                                   <Prev

Friday, March 25, 2011

மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை

மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:
‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’; (1)
ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:
‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’. (2)
இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)
1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது
இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.
நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:
நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.
தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)
நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:
முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)
சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:
மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)
டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.
ஆய்வில் உதவிய நூற்கள்
(1) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(2)D.L. Parsell, "Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins", National Geographic News, July 10, 2002
(3) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002
(4) The Guardian, 11 July 2002
(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225
source: eegarai.net/-f17/---t32545.htm?theme_id=1351

சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்

நெல்லை இப்னு குலாம்ரசூல்
உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு மதங்களை மார்க்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் பின்பற்றும் அம்மதங்களின் அடிப்படை வேதங்களாகவோ புராணங்களாகவோ மனிதர்கள் சிலரின் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகவோ எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்து இயற்கையின் நியதிப் படி முடிவுறுகின்றன என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாகவோ இருக்கின்றன.
நம்மைப் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதில் பல்வேறு மதத்தார் ஒரே கருத்தில் இருந்தாலும் கூட அவர்கள் சார்ந்திருக்கும் வேதங்கள் புராணங்கள் இக்கருத்தை நன்றாக வலியுறுத்தியும் கூட வழிநடாத்திச் செல்லும் மதகுருமார்கள் பண்டிதர்கள் முன்னோடிகள் மார்க்க அறிஞர்கள் செய்யும் போதனைகளால் அம்மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய மக்கள் அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் அடிப்படையையே மறந்து புதிய மாற்றமான புகுத்தப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
இதனால் ஓரிறைக் கொள்கை மறைந்து ஒன்றுக்கு மேற்பட்ட பல்கிப் பெருகிய பல தெய்வங்களின் வருகையும் அத்தெய்வங்களின் கற்பனை செய்யப்பட்ட உருவகங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் என்ற பெயரால் புனையப்பட்டவைகள் நடைமுறையில் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
நடைமுறை வணக்க வழிபாடுகள் எவற்றுக்குமே (ஓரிறைக் கொள்கைக்கு முரணான) எந்த அடிப்படையோ அல்லது ஆதாரங்களோ கிடையாது. ஆகவே சிந்தித்து அம்மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் ஆகிவிடுகின்றது. இந்நிலையில் படைத்த வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொண்ட ஏற்றுக் கொண்ட மார்க்கம் என அருள்மறையில் கூறுகையில் இப்படிக்கூறுகிறான்:
''நிச்சயமாக தீனுல் இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (எற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்.'' (அல்குர்ஆன் 3:19)
மற்றொரு வசனத்தில்,
இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவரேனும் தேடினால் அப்போது அவரிடமிருந்து (அம்மார்க்கம்) அங்கீகரிக்கப் படவே மாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார். (அல்குர்ஆன் 3:85).
மேற்கூறிய வசனங்கள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதையும் இஸ்லாம் அல்லாத பிற மதங்கள் சமயங்கள் பகுத்தறிவு சித்தாந்தங்கள் பெரும்பான்மை சமுதாயத்தாரால் பின்பற்றப்பட்ட போதிலும் அவைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படாதவைகள் என்பதற்கு அருள் மறை கூறும் அழகிய சான்றுகளாகும்.
சிந்திக்கும் திறன்:
எதையும் சிந்தித்துச் செயலாற்றும் மனிதன் தான் சார்ந்திருக்கும் ஆன்மீக நெறிவழி சரிதானா? எனச் சிந்திப்பது மிக அரிது. பிற கால்நடைகள் விலங்குகளுக்கு வழங்கப் படாத விசேஷ அறிவு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனத் தம்பட்டமடிக்கும் மனிதன் தன் ஆறாவது அறிவான பகுத்தறிவை தான் சார்ந்திருக்கும் மதம் சரியானதா? அறிவுப்பூர்வமானதா? ஆதாரப்பூர்வமானதா? அடிப்படை என்ன? அதன்படி நடந்தால் இம்மை மறுமை நலனைத் தருமா? நாம் ஏன் இந்த மதத்தைப் பின்பற்றுகிறோம்? எனச் சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதேயில்லை.
கண்ணால் பார்த்து உணரும் பார்வையறிவு, காதால் கேட்டு உணரும் கேள்வியறிவு, நாவால் சுவைத்துணரும் ருசியறிவு, தோலினால் உணரும் தொடு அறிவு, மூக்கினால் நுகர்ந்து அறியக்கூடிய நுகர் அறிவு இப்படி அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்துக்கும் இருக்கக்கூடிய ஐந்தறிவினைப் பட்டியல் போட்டு தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பகுத்தறிவைப் பற்றிப் பீற்றும் போது நல்லது எது? கெட்டது எது? எனத் தேர்வு செய்யும் திறனை சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக அங்கலாய்க்கிறான். தனக்குத் தேவையான உலகாசை சம்மந்தமானவற்றைத் தேர்வு செய்வதில் மனிதன் காட்டும் அக்கறையும் அபிலாஷையும் ஆன்மீகத்தில் துளியளவும் காட்டுவதில்லை. அவன் சார்ந்திருக்கும் மதத்தில் ஒன்று, ஆகும் என்றோ ஆகாது என்றோ தீர்மானிக்கும் முழு அதிகாரமும் மதகுருமார்கள் கையில் இருந்தது என்பதற்கு கீழ் காணும் அருள்மறை வசனமும் அதன் விளக்கவுரையாகிய நபிமொழியும் சான்றுகளாகும்.
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! (சத்தியத்தை விட்டும் இவர்கள்) எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன் 9:30-31).
அருள்மறையின் இவ்வசனங்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்ட அதீபின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் பாதிரிகள் மதகுருக்கள் ஆகுமாக்கி வைத்ததை ஏற்றும் அவர்கள் தடுத்ததை விலக்கியும் வந்த சமுதாயத்தாரின் இச்செயலையே அல்வாஹ் அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொண்டனர் எனக் கூறுகிறான் என்று விளக்கமளித்தார்கள் என்பதை நபிமொழிகளில் காணமுடிகிறது. ஆகவே சமுதாயம் ஆன்மீகத் துறையில் சிந்தித்து செயல்படவில்லை என்பது நன்கு விளங்குகிறது.
சிந்திக்கத் தடை:
தான் சார்ந்திருக்கும் மதம் கூறும் கோட்பாடுகள் சரியா?. அறிவுப்பூர்வமானவையா? ஏன ஆய்வு செய்தார் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி. அவருடைய அறிவியல் ஆய்வின் தீர்வு உலகம் உருண்ட வடிவத்தில் இருப்பதாகவும் அது சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி வருகிறது எனக் கூறினார். அவர்தான் கலீலியோ. கிறிஸ்தவ மதச்சித்தாந்தமோ உலகம் தட்டையானது எனக்கூறியது. மதச்சித்தாந்தத்துக்கு மாற்றமாக ஆய்வின் தீர்வை அறிவித்த கலீலியோ மதகுருமார்களால் பாதிரிகளால் கண்டிக்கப்பட்டார். இறுதியில் கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்குள்ளாகி உயிர் நீத்தார்.
இந்து மதத்தார் போற்றும் பேணும் சட்ட நூல்களில் ஒன்றாகிய மனுஸ்மிருதி மார்க்க ஞானம் (வேதத்தைப் பற்றிய கல்வி) ஒருசாரார்க்கு மட்டுமே சொந்தம். அவர்களைத் தவிர வேறு சாரார் எவரும் கற்ககூடாது எனத்தடை விதிப்பதுடன் பிறப்பால் தாழ்ந்த பிரிவினர் வேத வசனங்களை காதுகொடுத்துக் கேட்கவும் கூடாது என்று பிரகடனம் செய்கிறது. மீறி கேட்பார்களேயானால் அவர்களின் காதுகளில் ஈயத்தைப் பழுக்க காய்ச்சி ஊற்ற வேண்டுமென்ற தண்டனையை நிறைவேற்ற உத்திரவிடுகிறது. இப்படி கல்வியறிவைப்பெற கற்றபடி செயல்பட சிந்திக்க செயலாற்ற என எல்லா நிலைகளின் வாசல்களையும் அடைத்து ஒருசாரார் கூறும் கருத்துக்களே உன்னதமானவை. மறுக்கமுடியாதவை. பின்பற்றத்தக்கவை என பிதற்றும் பித்தலாட்டங்களைப் பார்க்கிறோம். சிந்திக்கத் தடைவிதிக்கும் இம்மதங்கள் மனித சமுதாயத்தாரில் பெரும்பாலும் பின்பற்றப் பட்டு வந்தாலுங்கூட சிந்திக்கத்தூண்டும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களைப் பெற்ற அல்லாஹ்வின் அங்கீகாரம் கிட்டிய மார்க்கமான இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுகிறதா? என ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிந்திக்கத் தூண்டுகிறது:
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அருள்மறை சிந்திக்கக்கூறி உலகோரை அழைக்கும் வசனங்கள் ஏராளம். ஏராளம். ஓரிரு சான்றுகளைக் காண்போம்.
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (அல்குர்ஆன் 25:73).
மேற்கூறிய அருள்மறை வசனங்கள் சிந்திக்கத் தூண்டுவதுடன் ஒரு படிப்பினையையும் நமக்குக் கற்றுத்தருகிறது. அதாவது எந்த ஒரு கருத்தும் எவரால் சொல்லப்பட்டாலும் அக்கருத்து சரியானதுதானா? என்பதை சிந்தித்து தீர்மானிக்க கூறுகிறது. அருள்மறை வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக இருந்தாலும் அதனையும் சிந்தித்துச் செயல்படக்கூறும் வியப்பை (அல்குர்ஆன் 25:73)ப் பார்த்தோம். சொல்பவர் யார்? என்று பார்க்காமல் சொல்லும் கருத்து சரிதானா? என்ற உயரிய சித்தாந்தம் இங்கு நிலைநாட்டப் படுகின்றது.
முரண்பாடற்றது:
அருள்மறை வேதங்கள் மனித வாக்குகள் அல்ல. படைத்த இரட்சகனின் பரிசுத்தக் கருத்துக்கள் என்பதற்கும் மனிதர்களின் உளறலைப்போல் முன்னுக்குப் பின் முரணாகத் திகழாமல் முரண்பாடற்று விளங்குவதும் அருள்மறைக் குர்ஆன் அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டது என்பதற்கு அருமையான சான்றுகளாகும். அல்லாஹ்வே வேத நூலாகிய அருள்மறைக் குர்ஆனை அருளி அதனைப் பிற வேதங்கள் மனிதக் கரங்களால் மனோஇச்சைக்கு ஆளாகி மாசுபடுத்தப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதைப் போல எவிவித மாற்றங்களுக்கும் ஆளாகாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான் என்பதை வல்லோன் அல்லாஹ் வான்மறையில் கூறுவதைப் பாருங்கள்:
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82).
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(அல்குர்ஆன் 15:9).
பிற வேதங்கள் அது அருளப்பட்ட மூல மொழியில் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறு இல்லாமல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வேதவசனங்களை நீக்கியும் மனித கருத்துக்களைச் சேர்த்து இடைச்செருகல் செய்தும் கூட்டியும் குறைத்தும் மாசுபடுத்தப்பட்டு முரண்பாடுகளின் சிகரத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். ஏனவே வல்ல அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனை பிற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாக அருளினான்.
(நபியே) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் (அல்லாஹ்) உம்மீது இறக்கியருளினான். இவ்வேதம் இதற்கு முன்னுள்ள (வேதங்கள்) அனைத்தையும் உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 3:3).
இஸ்லாத்தில் கல்வியின் மகிமை:
மனிதனின் சிந்தனை சக்திக்கு உறுதுணையாய் அமைவது கல்வியறிவே. இக்கல்வியறிவு இஸ்லாத்தில் முக்கிய கடமைகளில் ஒன்றினைப் போல் மிக வலியுறுத்தப் படுகின்றது. அல்லாஹ் முதன்முதலில் மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்கு கல்வியறிவைப் புகட்டியதை அருள்மறை கூறுவதைக் காணுங்கள்.
(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி அவர்களிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள் என (அல்லாஹ்) கூறினான். (2:31). அல்லாஹ் ஆதமுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்துவிட்டு மலக்குகள் மூலம் இஸ்லாமிய ஒழுக்கமாண்புகளில் ஒன்றாகிய ஸலாத்தைக் கற்றுக் கொடுத்ததைக் கீழ் காணும் நபிமொழி உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹுத்தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தபொழுது அவர்களுக்கு கூறினான்: ஆதமே நீர் சென்று அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தார்க்கு ஸலாம் கூறுவீராக. அதற்குப்பதிலாக அம்மலக்குகள் உமக்கு வழங்கும் பதிலைச் செவிமடுப்பீராக. நிச்சயமாக அதுவே உமக்கும் உம் சந்ததியினர்க்குமுரிய பதிலா(ஸலாத்தின்)கும். அதன்படி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அம்மலக்குகளிடம் சென்று உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக எனக்கூற அதற்கு அம்மலக்குகள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹி உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள். வரஹ்மத்துல்லாஹி என்ற சொல்லைத் தம் பதிலில் மலக்குகள் அதிகப்படுத்தினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
குர்ஆனின் முதல் வஹிச் செய்தி:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று.
ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள்.
இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்."அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்து விட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். (அல்குர்ஆன் 96:1-3) வசனங்களின் பினனணி. (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி ஹதீஸ் எண்:3.)
வல்ல அல்லாஹ் படைப்பின் துவக்கத்தைக் கல்வியில் ஆரம்பித்தது போல் மனித வாழ்வின் ஒட்டுமொத்த அழிவு நாளாகிய கியாமநாளின் அடையாளமாகவும் கல்வியை ஆக்கியிருப்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது. கல்வி அகற்றப்பட்டு விடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி :5231)
இவ்வாறு கல்வியின் இன்றியமையாமை பற்றி இஸ்லாம் கூறுவதுபோல் எந்த மதமும் கூறவில்லை என அறியலாம். இஸ்லாமிய வரலாற்றில் முதல்போராகிய பத்ர் போர் இறை நிராகரிப்பாளர்களுக்கும் இறை விசுவாசிகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. இப்போரில் அல்லாஹ் இறை விசுவாசிகளுக்கு வெற்றியை நல்கினான். முஸ்லீம்களால் சிறை பிடிக்கப்பட்ட குறைஷிய முஷ்ரிக்குகள் கல்வியறிவு இல்லாத முஸ்லீம்களில் ஒரு பகுதியினர்க்கு கல்வி கற்பித்துவிட்டு தம்மை சிறையிலிருந்து விடுவித்துக்கொண்டு விடுதலை பெற்ற செய்தியை நபிமொழிகளில் நம்மால் காணமுடிகிறது.
பகுத்தறிவுப் பாசறை இஸ்லாம்:
அல்லாஹ் ஆட்சி அதிகாரங்கள் வழங்கி கண்ணியப் படுத்திய ஒருவன் நன்றிகொன்றவனாக இறை விசுவாசி ஒருவரிடம் செய்த தர்க்கத்தையும் அவ்விசுவாசி வழங்கிய பகுத்தறிவுப் பூர்வமான பாங்கான பதிலை அருள்மறை அழகுடன் விவரிப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக (நன்றி கொன்ற)அவன் அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீமிடம் அவரின் இரட்சகனைப் பற்றித் தர்க்கித்ததை (நபியே) நீர் பார்க்கவில்லையா?. அதுசமயம்; இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில்உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர்வழி காண்பிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:258).
விவாதம் புரிவதில் விசுவாசி காட்டவேண்டிய நிதானம் நளினம் பகுத்தறிவு மிளிரும் வினா இவை இங்கே நாம் படிப்பினை பெறும் விஷயங்கள். மார்க்கம் என்ற பெயரால் இன்று நிகழ்த்தப்படும் விவாதங்களில் வரைமுறை மீறி வாய்க்கு வந்ததை கூறிவிட்டு வார்த்தை தவறி கவனக்குறைவாக வந்து விட்டது எனச் சமாளிப்பது இவை இன்றைய நடைமுறைகள்.
அறிவியல் ரீதியாக:
இன்றைய விஞ்ஞான உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் உலாவந்து கொண்டிருக்கும் வேளையில் பின்பற்றும் மார்க்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக முரணாக அமைந்து விடுமானால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் மார்க்கம் எனச் செய்யும் பிரகடனங்கள் பிசுபிசுத்துவிடும். இஸ்லாம்கூறும் எந்த ஒரு தீர்வும் அறிவியல் முடிவுகளுடன் பொருந்திப்போவது நம்மை பிரமிக்க வைக்கிறது. அறிவியல் தீர்வுகள் இஸ்லாமியச் சித்தாந்தத்துடன் முரண்பட்டால் அறிவியல் தீர்வுதான் மாற்றம் பெறுகிறது மறுபரிசீலனைக்குள்ளாகிறது என்பதை நாம் உணரவேண்டும்.அறிவியல் ரீதியாக அருள்மறை அன்றே கூறிய விஷயங்கள் இன்று உண்மைப் படுத்தப்பட்டதை ஓரிரு சான்றுகளில் காண்போம்.
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லா கோள்களும் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 36:40)
கோளங்கள் விண்மீன்கள் நட்சத்திரங்கள் வான வெளியில் தத்தம் பாதைகளில் மிதந்து சுழன்று கொண்டிருப்பதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (அல்குர்ஆன் 55:19-20).
சங்கமிக்கும் இருகடல்களின் நீர் ஒன்றோடொன்று சேர்ந்து விட்டதுபோல் நம் கண்ணுக்குப் புலப்பட்டாலும் அவற்றின் சுவை நிறம் தன்மை அடர்த்தி ஆகியவற்றின் வேறுபாட்டால் அவ்விரு கடல்களின் இடையில் வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை உள்ளதை இன்றைய அறிவியல் தீர்வு உறுதிப் படுத்துகிறது. நபி மொழி ஒளியில் அறிவியல் விந்தைகளை அலசுவோமேயானால் உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி :3320 அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)இவ்வாறு அறிவியல் ரீதியிலான தீர்வுகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் ஒவ்வொன்றையும் இன்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
சிந்திப்பதில் தடையில்லை தீர்வு செய்வதில் வரையறை:
இஸ்லாமியச் சித்தாந்தங்கள் சிந்திப்பதற்கு எப்பொழுதும் தடை விதித்ததேயில்லை. மாறாக சிந்தித்துப் பெரும் தீர்வில் வரையறை உள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கு ஆய்வு செய்வோம். அருள்மறை வசனம் கூறும் கூற்று இதோ: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69).
ஏகத்துவக் கருத்தை எடுத்துக்கூறிய இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இணைவைப்பாளர்களால் நெருப்புக் கிடங்கில் வீசப்பட்டதும் அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களப் பாதுகாக்க எரியும் நெருப்பின் சுடக்கூடிய தன்மையை மாற்றி அதனை இதமளித்து இடரிழைக்காத தன்மையை வழங்குவதாக அல்லாஹ் மாற்றும் நிலையை மேற் கூறிய வசனம் கூறுகிறது. இதனைச் சிந்தித்துப் பார்த்தால் நம் பகுத்தறிவு சுடும் நெருப்பு இதமளிக்குமா? என்ற வினாவுடன் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் இத்தன்மையை மாற்றியதாக யார் கூறுகிறார்? என்று பார்த்தால் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் அந்நேரத்தில் சுடும் நெருப்புக்கு இட்ட உத்தரவு என்பதை விளங்கிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமும் இல்லை. மற்றொரு அருள்மறை வசனத்தின் கூற்று இதோ: உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலைபோன்று ஆகிவிட்டது. (26:63)
கைத்தடியால் கடலில் அடித்ததால் கடல் பிளந்து மலைபோல் குவிந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்கூட்டத்தாருடன் அதனைக் கடந்து செல்ல வழிவிட்டது என்ற இவ்வசனத்தின் படியுள்ள செய்தியை நம் பகுத்தறிவு இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் கைத்தடியினால் கடலில் அடியுங்கள் என உத்திரவிட்டது அக்கடலைப் பிளந்து வழிவிட வைத்தது வல்லஅல்லாஹ்தான் என்பதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு இடம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. இதுபோன்று அருள்மறை ஒளியில் இன்னும் சில நிகழ்வுகளைக் காணலாம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறுத்துப் பலியிட தம் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைத்துச்சென்றது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது. இப்படி நிறைய நிகழ்வுகள் நம் பகுத்தறிவுக்கு அப்பற்பட்டதாக இருந்தாலும் இக்கூற்றை படைத்த அல்லாஹ் கூறுகிறான். ஆகவே அல்லாஹ் எப்படி நமக்கு கூறுகிறானோ அதை சிந்தித்த பின் அப்படியே ஏற்றுக் கொள்வது ஈமானிய உறுதியை மேலும் வலிமைப்படுத்தும்.
ஹதீஸ்களின் அடிப்படையில் சில நிகழ்வுகளை இனி அலசுவோம். உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலோ அதைப்பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான் (2:284) என்ற அருள்மறை வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் இதனை மிகச் சிரமமாக எண்ணினர். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே எங்கள் மீது தொழுகை ஜிஹாது நோன்பு தர்மம் ஆகிய பணிகள் இயன்ற அளவு செய்ய பணிக்கப்பட்டதும் அதனை நாங்கள் செய்து வருகிறோம். இப்பொழுது தாங்கள் மீது இவ்வசனம் இறங்கியுள்ளது. இதனைச் செய்ய நாங்கள் சக்தி பெறவில்லை எனக்கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு முன்பு வேதங்கொடுக்கப்பட்ட இருசாரார் (யூத கிறிஸ்தவர்கள்) கூறியது போன்று நாங்கள் செவிமடுத்தோம் மாறுசெய்தோம் எனக்கூற நாடுகிறீர்களா?. அவ்வாறல்லாமல் நாங்கள் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் எனக்கூறுங்கள். எங்கள் இரட்சகனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே எங்களின் மீட்சியுள்ளது என பிரார்த்தியுங்கள் எனக்கூற நபித்தோழர்கள் அவ்வாறே ஏற்றுக்கொண்டு பிரார்த்தித்ததும் அல்லாஹ் அருள்மறையின் இவ்வசனத்தை இறக்கினான்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).
இறைத்தூதர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படிச் செயல்பட இந்த ஹதீஸ் கூறுகிறது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம்)
மற்றொரு ஹதீஸ் ஹஜருல் அஸ்வத் கல் பற்றி கூறுவதைப் பாருங்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதைக் கண்டேன். அவர்கள் அந்த (ஹஜருல் அஸ்வத்) கல்லை நோக்கி நீ ஒரு கல். உன்னால் எந்த பயனையும் தரமுடியாது. நீ எத்தகைய தொல்லையும் அளிக்க இயலாதது. உன்னை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை (ஒருபோதும்) முத்தமிட்டிருக்க மாட்டேன் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹாஃபிஜ் பின் ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி முஸ்லீம்).
இதுபோன்றே ஒளு எடுக்கத் தண்ணீர் இல்லாத போது செய்யும் தயம்மம் காற்று பிரிந்து விட்டால் அம்மறைவிடத்தை சுத்தம் செய்யாமல் முறிந்த ஒளுவை மீண்டும் செய்வது போன்ற சில அமல்கள் நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்து காட்டினார்கள் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமல் செய்வதே இறைப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும்.
பகுத்தறிவைப் பெறாத படைப்பினங்கள் பெற்றுள்ள சிறந்த அறிவு பகுத்தறிவு என்பது ஒரு காரியத்தைச் செய்யும்போது அது நமக்கு பயனளிக்குமா? தீங்கிழைக்குமா? என பிரித்துப் பார்த்து இம்மை மறுமை நலன்களை நாடிச் செய்தால் பகுத்தறிவில் நிறைய பலன்களுண்டு. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அதனைத் தவறாக துஷ்பிரயோகம் செய்கிறான். மது மனிதனின் மதியை மயக்கி அவனை பிறர்கண்டு நகைக்கும்படி செய்துவிடும் என்ற முடிவை நன்கு தெரிந்திருந்தும் மது அருந்துகிறான். பிறர் பொருளைத் திருடுபவன் அமானித மோசடி செய்பவன் அதனை இழந்து தவிப்பவன் படும் அல்லல்களை நன்றாக அறிந்தே அத்திருட்டை மோசடியைச் செய்கிறான். இதுபோல பிற சமூக விரோதச் செயல்களான விபச்சாரம் வரதட்சணை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன்தான் செய்கிறான். மறுமைப் பலனை அவன் மறந்தே விடுகிறான். ஆனால் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு கொடுக்காமல் மிகச் சிறந்த நுண்ணறிவு ஒன்றை மனித ஜின்கள் தவிர பிற படைப்பினங்களுக்கு வழங்கியிருப்பதை நடைமுறையும் நபிமொழியும் நமக்குணர்த்துவதைக் காண்போம்.
அண்மையில் இந்தோனேஷியா இலங்கை தமிழகத்தைத் தாக்கிய சுனாமி என்ற பேரழிவு அதன் பாதிப்புகள் பற்றி செய்தி ஊடகங்கள் விலாவாரியாகக் கூறின. அச்செய்திகளில் ஒன்று: சென்னை மெரீனா கடற்கரை ஓரம் அதிகாலையில் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் அங்கே மிரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு மாட்டைப் பின் தொடர அம்மாடு ஓடி நின்ற இடத்திலிருந்து சற்று அருகாமை வரையில் சுனாமி அலைகளின் பேரழிவு தாக்கியிருப்பதைக் கண்ட அக்கால்நடை மருத்துவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் மாடு-வின் உதவியால் தாம் உயிர் பிழைத்ததாகக் கூறினார். சுனாமி அலைகள் நம்மைத் தாக்க வருகின்றது அதன் எல்லை இங்கு வரையுள்ளது என்ற நுண்ணறிவை வல்ல அல்லாஹ் ஒரு மாட்டுக்கு வழங்கியிருப்பதையும் மனிதன் பகுத்தறிவு பெற்றவன் பரிதாபமாகப் பாதிக்கப் பட்டதையும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.
அண்மையில் அண்டை நாடான பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பம் ஏற்படுத்திய மிகப்பெருஞ் சேதாரங்களை விவரித்துக் கூறிய செய்தி ஊடகங்கள் ஒரு ருசிகரமான வியத்தகு உண்மையொன்றை கூறத் தவறவில்லை. அச்செய்தி இதுதான்:
பாகிஸ்தானின் தலைநகராகிய இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் நடந்த அவ்விடத்தையொட்டிய மரங்களின் மீதிருந்த பறவைகள் நிலநடுக்கம் நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ச்சி செய்ததை அரப் நியூஸ் ஆங்கில நாளேடு குறிப்பிட்டிருந்தது. பகுத்தறிவு பெற்ற மனிதன் பெறாத இந்த நுண்ணறிவை படைத்த ரப்புல் ஆலமீன் பறவைகளுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு கொள்ளவில்லையா?. இச்செய்திகளை உறுதிப் படுத்தும் ஒருநபிமொழியைப் பாருங்கள்:
"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1314)
மற்றொரு ஹதீஸின் பிரகாரம்: "ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1338)
மற்றொரு அறிவிப்பில் மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) 'மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்' என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன" என்றார்கள். அதற்குப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6366)
அல்லாஹ்வின் நல்லடியார்களே வல்ல அல்லாஹ் அருள் மறையில் கூறிய படியும் உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களின் படியும் அதற்குறிய வரையரைக்குள் சிந்தித்து நல்லறங்கள் புரிந்து நமது இம்மை மறுமை வாழ்வைச் செம்மைப் படுத்த வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்.