[ காஃபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)
ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீதுபழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.
மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.]
"முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்." (ஸுரா : அர்ரூம் :32)
"எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை." (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ‘நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.’ (புகாரி,முஸ்லிம்)
இன்றைய உலகம் பூகோள ரீதியில் இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சியை, மறுமலர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. எவராலும் மறுக்கமுடியாத அளவுக்கு இவ்வெழுச்சி படியாத பாமரர், படித்த வாலிபர் உட்பட ஆண், பெண் எல்லோரையும் தழுவிய உலகின் சந்து பொந்துகளிலெல்லாம் வியாபித்து நிற்கும் ஒன்று என்ற வகையில் மிகவும் பலமிக்கதாக விளங்குகின்து.
இந்த உலகலாவிய இஸ்லாமிய எழுச்சியானது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இலங்கை போன்ற நாடுகளிலும் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துத்தியுள்ளது.
ஆயினும் இவ்வெழுச்சிக்கு பல தடைகள் உருவாகியுள்ளமை கவலைக்குறியதாகும். அவை இவ்வெழுச்சியின் விளைவுகளைத் தாமதப்படுத்தியும், இல்லாமல் செய்தும் வருகின்றன. அத்தiகைய தடைகளுள், குறிப்பிட்ட சிலரது அவசரப்போக்கு, நிதானமற்ற அணுகுமுறைகள், தீவிரப்போக்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.
1. தீவிரமும் நிதானமின்மையும்
இங்கு நாம் ‘தீவிரம்;’ என்ற சொல்லை இஸ்லாத்தின் எதிரிகள் குறிக்கும் ‘தீவிரவாதம்’ என்ற கருத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களோ தூயமுஸ்லிம்கள் அனைவரையும் மதத்தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற பெயர்களில் சுட்டுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தின் பெயரால் சிலர் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எதிரிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களை உண்மைப்படுத்துவது போல அமைவதுதான்; வேதனைக்குரியதாகும். இத்தகையவர்களின் நிதானமற்ற போக்கு இஸ்லாமிய எழுச்சியையும் அதனடியாக எழுந்துள்ள இஸ்லாமிய மறுமலர்ச்சியையும் பெரிதும் பாதித்து வருகின்றது. எனவே இத்தகையவர்கள் நிதானத்தைக் கைக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ‘அவசரப்படுதல் ஷைத்தானிலிருந்தும் உள்ளது. நிதானமும் அமைதியும் அல்லாஹ்விடமிருந்தும் உள்ளது.’ என்ற நபிமொழி எமது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். (திர்மிதி)‘ஷிர்க்’ போன்ற பெரும் பாவங்களை எதிர்ப்பதிலும், ஒழிக்க முற்படுவதிலும் கூட நிதானம் கடைபிடிக்கப்படல் வேண்டும்; நன்மையான விடயங்களை செய்வதில் கூட அளவு கடந்த அவசரமும், நிதானமிழந்த போக்கும் வரவேற்கத்தக்கதல்ல. பதறிய காரியம் சிதறும் என்பார்கள். பொறுத்தவன் புவி ஆள்வான்;. பொறுமை இழந்தவன் காடேருவான் என்பது முதுமொழி. இன்று உலக மட்டத்திலும் சரி எமது நாட்டு மட்டத்திலும் சரி எமது அவசரத்தின் காரணமாகவும், நிதானமிழந்த போக்குகளின் காரணமாகவும் நாம் பல கஷ்டங்களை அனுபவித்தும், நஷ்டங்களை அடைந்தும் வருகின்றோம். சமூக மாற்றம் என்பது ஓரிரவில், ஒருபகலில் ஏற்படக்கூடியதல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது படிப்படியாக, கட்டம் கட்டமாக ஏற்படக் கூடியதாகும். அத்தகைய மாற்றம்தான் ஆரோக்கியமானதும் நிலைக்கக் கூடியதுமாகும். அவசரத்தில் தோன்றுகின்ற செயற்கையான மாற்றங்கள் போலியானவை. நிலைக்காதவை.
எமது முயற்சிகளுக்குரிய விளைவுகளை நாம் கண்டேயாக வேண்டும் என்று சிந்திப்பதும் அதற்காக எத்தகைய வழிமுறைகளையும் கையாள முயற்சிப்பதும் இஸ்லாமிய அணுகுமுறைகளல்ல. முயற்சிப்பதே எமது கடமை; விளைவுகள் அல்லாஹ்வின் கரங்களில். நாம் எமது முயற்சிகள் பற்றி விசாரிக்கப்படுவோமேயன்றி விளைவுகள் பற்றி கேட்கப்படமாட்டோம். மேலும் எமது இலக்குகள் புனிதமானவையாக இருப்பது போலவே அவற்றை அடைவதற்கான வழிமுறைகளும் புனிதமானவையாக அமைதல் வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டவிதியை நாம் மறந்துவிடக்கூடாது.
2. வேற்றுமைகளும் முரண்பாடுகளும்
இன்றைய இஸ்லாமிய எழுச்சிக்கு உருவாகியுள்ள மற்றுமொரு பெருந்தடை எம்மத்தியில் தோன்றியுள்ள வேற்றுமைகளும் முரண்பாடுகளுமாகும். அசத்தியக் கொள்கைகளைக் கொண்டவர்கள் கூட தம்மத்தியிலுள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை காண முயற்சிக்கின்ற காலமிது. தம்மத்தியில் பயங்கர முரண்பாடுகளைக் கொண்ட பல சக்திகளும் இன்று இஸ்லாம் என்ற பொது எதிரியைச் சந்திப்பதற்காக உடன்பட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடுபவர்களாக இருக்கின்றமை எவ்வளவு துரதிஷ்டமானது.!
இன்று நாம் எல்லா வளங்களையும், பலங்களையும் நிறைவாகப் பெற்றிருந்தும் எமது விவகாரங்களில் அடுத்தவர் தலையிடும் அளவுக்கும் தீர்மானங்கள் எடுக்கும் அளவுக்கும் உலக அரங்கில் பலயீனர்களாக மாறியுள்ளமைக்கு பிரதானமான காரணம் எமது ஐக்கியமின்மையாகும். அல்-குர்ஆன் இந்நிலைமையைப் பின்வருமாறு விளக்குகின்றது:
"நீங்கள் உங்களுக்குள் சர்ச்சைப்பட்டுக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் வலிமை குன்றிவிடும்" (அன்பால்: 46)
நாம் எமது முரண்பாடுகளைக் கண்டு கொள்வது போல எம் மத்தியிலுள்ள உடன்பாடுகளைக் கண்டுகொள்வததில்லை. அவற்றை நாம் காண்பதை ஷைத்தான் விரும்புகின்றானில்லை. எம் மத்தியில் பகைமையும,; குரோதமும் நிலைக்க வேண்டுமென்பதுதானே அவனது விருப்பம்.
நாம் முரண்படுகின்ற விடயங்கள் ஐந்து என்றால் உடன்படுகின்ற அம்சங்கள் ஐம்பது இருக்கின்றன. இவ்வுண்மையை எம்மால் புரிந்து கொள்ள முடியுமென்றிருந்தால் எமது சமூக, சன்மாரக்க நிலைகள் எவ்வளவு ஆரோக்கியமடையும்.! அர்க்கானுல் ஈமான் எனும் ஈமானின் அடிப்படைகளிலும், அர்க்கானுல் இஸ்லாம் எனும் இஸ்லாமியக் கடமைகளிலும் எம்மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் இல்லை என்றே கூற வேண்டும்.
சன்மார்க்கத்தின் உஸுல் (அடிப்படைகள்) கவாயித் (விதிகள்) புரூழ்கள் (கடமைகள்) கபாயிர் (பெரும் பாவங்கள்) முதலானவற்றிலும் எம்மத்தியில் அபிப்பிராயபேதங்கள் குறைவு எனலாம். கருத்து வேறுபாடு நிலவுவதெல்லாம் புரூஃ (கிளை அம்சங்கள்), நாவாபில் (ஸுன்னத்துக்கள்), ஸகாயிர் (சிறுபாவங்கள்) போன்ற ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களிலாகும். ‘காயாத்’ எனும் இலக்குகளைப் பொறுத்தவரையில் எம்மத்தியில் முரண்பாடுகள் குறைவு. அவற்றை அடைவதற்கான ‘வஸாயில்’ எனும் வழிமுறைகளிலும், அணுகுமுறைகளிலும்தான் சில உடன்பாடற்ற நிலைகள் காணப்படுகின்றன. இத்தகைய விடயங்களில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதில் தவறில்லை.
ஒவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளுக்கு உரிய சன்மார்க்க ஆதாரங்களை கொண்டிருக்கும் வரை எத்தகைய ஆட்சேபனையும் தெரிவிப்பதற்கில்லை. ஆனால் இவ்விடயங்களில் ஏற்படும் ‘கிலாபுகள்’ (வேறுபாடுகள்) எம்மத்தியில் ‘ஷிகாக்கை’ (பிளவுகளை) தோற்றுவிக்கலாகாது. கருத்து முரண்பாடுகளின் போது எமது முனனோர்கள் கைக்கொண்ட ஒழுங்குகளை கடைபிடிக்கப்படாமையினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு விடயத்தில் நான் ஒரு கருத்தை கொண்டிருக்கலாம், மற்றொருவர் அதில் என்னோடு முரண்படுகின்ற போது அவர் முஃமினாக இருக்கும் வரை அவருடன் மிகவும் பண்பாடாக நடந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கக்கடமையாகும்.
‘இது விடயத்தில் எனது கருத்து சரியானது. அது பிழையாக இருக்கவும் இடமுண்டு. இது விடயத்தில் அடுத்தவரின் கருத்து பிழையானது. அது சரியாக இருக்கவும் இடமுண்டு.’ இக் கூற்று எமது முன்னோர்கள் கருத்து வேறுபாடுகளின் போது கைக்கொண்ட ‘ஆதாபுகளுக்கு’ ஒரு சிறந்த உதாரணமாகும்.
காஃபிரகளுடன் கூட ஆதாரங்களை முன்வைத்து அழகாகவும், பண்பாடாகவும் விவாதிக்குமாறு அல்-குர்ஆன் பணிக்கின்றது.’மேலும் அவர்களுடன் சிறந்த (பண்பாடன) முறையில் விவாதிப்பீராக.’ (16:125)
ஆனால் நாமோ நமது சகோதர முஸ்லிம்களுடன் முரண்படுகின்ற போதெல்லாம் காரசாரமான வாதப்பிரதிவாதங்களிலும் தர்க்க குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றோம். ஈமானிய உறவை மறந்து சொல்லம்புகளால் தாக்குகின்றோம். சொல்லால் மட்டுமன்றி கையால், கல்லால் அடிக்கவும் நாம் தயங்குவதில்லை. சில போது எமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக அடுத்த சகோதரர்கள் மீது பழி சுமத்துவதற்கும், அபாண்டங்களைக் கூறுவதற்கும் நாம் துணிந்து விடுவதுண்டு.
மொத்தத்தில் மார்க்கத்தின் பெயரிலேயே அது கூறும் சகோதரத்துவம், அன்பு, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு முதலான பண்புகளுக்கு நாம் சாவு மணி அடிக்கின்றோம். முஃமின்கள் தம்மத்தியில் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்கள். நளினமாகவும் நயமாகவும் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் குறிப்பிடும் அல்குர்ஆனின் போதனைகளை காற்றில் பறக்க விடுபவர்களாக நாம் இருக்கின்றோம்.
3. குறைந்த சன்மார்க்க அறிவு
உண்மையில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் எம்மத்தியில்லுள்ள பிரிவுகளும் பிரிவினைகளும் பெரும்பாலும் எமது சன்மார்க்க அறிவிலுள்ள குறைபாட்டினால் உருவானவையாகும். இவ்வாறு சன்மார்க்க அறிவிலுள்ள கோளாரின் காரணமாகவே ஒவ்வொரு குழுவினரும் தாம் மாத்திரமே சரி என்றும் தம்மை மாத்திரம் ‘அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ’ அமைப்பாக இனம் காட்டி தம்முடன் சிற்சில விடயங்களில் முரண்படுகின்ற பிற இஸ்லாமியச் சகோதரர்களை அதற்;கு அப்பால் இருப்பவர்களாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். மேலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தஃவாக்களத்தில் – அறிவும் அறிவும் மோதுவதாக தெரியவில்லை; அறிவும் அறியாமையும் முட்டிக்கொள்வதையும் காண்பது அரிது. அறியாமையும் அறியாமையுமே முட்டி மோதி சமூகத்தில் புரளிகளை கிளப்புவதைப் பார்க்க முடிகின்றது. மேலும் குறுகிய இயக்க வாதங்கள், தனிமனித பலவீனங்கள், தப்பபிப்பிராயங்கள் முதலானவையும் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வருகின்றன.
4. உலமாக்களின் கடமை
இவ்வாரோக்கியமற்ற நிலை மிக அவசரமாக மாற்றப்படல் வேண்டும். இல்லாத போது இன்று நாம் காணும் இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகள் பூச்சியமாகி விடும் பேராபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இங்கு உலமாக்களின் பணி அவசியமாக வேண்டப்படுகின்றது. குறுகிய இயக்க வாதங்களை மறந்து அவர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்காக உழகை;கும் மகத்தான பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் உம்மத் பலயீனமுற்ற சந்தர்பங்களிலெல்லாம் அதனை பலப்படுத்தி கட்டிக்காத்த பெருமை அவ்வக்கால உலமாக்களையே சாரும். இறையச்சமும், நிறைந்த அறிவும், துணிச்சலுமிக்க ஒரு தலைமைத்துவம் எம் சமூகத்திற்கு இன்று தேவைப்படுகின்றது. இது ஒரு தனிமனித தலைமைத்துவமாகவன்றி ஒரு கூட்டு தலைமைத்துவமாக அமைவதே தற்போதைக்கு சாத்தியமானதாகும். இதற்காக நாம் என்றும் வலியுறுத்துவது போல அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நிழலின் கீழ் எல்லா உலமாக்களும் தம்மத்தியிலுள்ள சிறுசிறு பேதங்களையும் மறந்து அணிதிரளவேண்டும். உடன்பாடான விடயங்களை கண்டறிந்து அவற்றில் அனைவரும் இணைந்து செயற்படவும், முரண்படும் விடயங்களில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும் எமது உலமாக்கள் முன்வர வேண்டும். இதுவே இஸ்லாமியப் பண்பும், எமது முன்னோர்களின் முன்மாதிரியுமாகும்.
இந்த மாற்றம் மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே இஸ்லாமிய நலன்விரும்பிகளின் வேணவாவாகும். உலமாக்களே! உங்களை கடமை அழைக்கிறது. கட்டுக்களை அவிழ்த்து (உம்மத்தின் நலன்) கருதி களத்திற்கு வர எல்லாம் வல்ல அல்லாஹ்வை இந்தப் புனிதமான மாதத்தில் பிராத்திப்போமாக.
- mjabir
source: http://ipcblogger.net/mjabir/
No comments:
Post a Comment